நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் மாமாவின் மகனார், என் நண்பர் நூர்சாதிக் ஃபோன் செய்தார். இசைமணி யூசுஃப் மாமாவைப் பார்க்கப் போகலாமா என்று.

என் உடல்நிலை கருதி நான் கடந்த பல மாதங்களாக எங்குமே செல்லவில்லை. ஏனெனில் எனக்குத் துணைக்கு ஒரு ஆள் வேண்டும்! அது பெரும்பாலும் மனைவிதான்.

ஆனாலும் போய்விட வேண்டியதுதான் என்ற ஒரு உந்துதல் ஏற்பட்டது. யுகபாரதியிடம் சொன்னேன். அவரும் போகலாம் என்றார். அவர் வீட்டுக்கு என்னை வந்துவிடச் சொன்னார்.

நான் என் பேரனைக் கூட்டிக்கொண்டு, என் மனைவி சம்மதத்துடன்தான், முதலி ஒரு கேப் எடுத்து யுகபாரதி வீட்டுக்குச் சென்றேன். அங்கே அவனை விட்டுவிட்டு

நான், யுகபாரதி, இயக்குனர் விக்கிரமாதித்தன், இன்னொரு இயக்குனர் சகிதமாகச் சென்றோம். அந்த இயக்குனர் பெயர் நினைவில் இல்லை. அவர்தான் காரை ஓட்டினார்.

ஜமீன் பல்லாவரத்தில் இருந்த இசைமணி மாமாவின் ’இசை இல்லம்’ வீட்டுக்குச் சென்றோம்.

இசைமணி மாமாவும் சீர்காழி கோவிந்தராஜனும் ஒரே காலத்தில் இசைமணி பட்டம் பெற்றவர்கள். நாகூர் தர்கா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் மாமாவிடம் ஐந்து ஆண்டுகள் கர்நாடக சங்கீதம் பயின்றவர் இசைமணி மாமா. இந்த தகவலை மாமாவே நேரில் பேசியபோது சொன்னார்.

மாஷா அல்லாஹ் அபார நினைவாற்றல் மாமாவுக்கு. நான் சில கேள்விகளைக் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சென்றிருந்தேன். ஆனால் மாமா எங்களைப் பார்த்ததும் அவராகவே பேச ஆரம்பித்துவிட்டார். அவர்தான் பேசிக்கொண்டே இருந்தார். நாங்கள் வெறும் செவிகளாக மட்டுமே இருக்க முடிந்தது! இடையில் தேநீர் பிஸ்கட் எல்லாம் கொடுத்தார்கள்.

யுகபாரதியையும் பெயர் சொல்லியே மாமா அழைத்தார்! என் ‘இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்ததையும், என்னோடு நிழல்படம் எடுத்துக்கொண்டதையும், நாகூர் ரூமி யாரென்று ஒருதரம் கவிஞர் சலீம் மாமாவிடம் விசாரித்தபோது, ’அவன் என் மருமகன்’ என்று மாமா சொன்னதையும் நினைவுகூர்ந்தார்.

பார்வையில் மட்டும் கொஞ்சம் குறையிருப்பதாகச் சொன்னார். 1933ல் பிறந்துள்ளார். 90களில் உள்ளார். நமக்குக் கொடுத்துவைக்குமா என்று தெரியவில்லை.

ஆனால் அவரைப் போன்றவர்களைப் பார்க்கக் கொடுத்துவைத்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்

இசைமணி மாமாவின் மகனார் அன்சாரி அவர்கள் தன் தகப்பனாரைப் பற்றி https://www.isaiillam.com/ என்றொரு வலைத்தளம் வைத்துள்ளார்.

ஒரு பாடலுக்கு மட்டும் லிங்க் கொடுத்துள்ளேன். போய்ப்பாருங்கள். கேட்டும் பாருங்கள்.

https://soundcloud.com/…/sets/isaimani-nagore-m-m-yosuff

மாமாவின் ஆரோக்கியத்துக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் துஆ செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் விரைவில் விரிவான கட்டுரை எழுத எண்ணம்.

நாகூர் ரூமி

Article Link : https://nidurseasons.blogspot.com/2021/08/blog-post_28.html?spref=pi